மஸ்கட்டில் ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் வெளியீடு

மஸ்கட்டில் ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் வெளியீடு
மஸ்கட்: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் ‘தேனிசைத் தென்றல்’ திரு. தேவா அவர்களால் வெளியிடப்பட்டது. பிரபல இசையமைப்பாளர் கலைமாமணி, ‘தேனிசைத் தென்றல்’ திரு.தேவா அவர்கள் புத்தகத்தை வெளியிட பிரபல திரைப்பட நடிகை கலைமாமணி குமாரி. சச்சு அவர்கள் புத்தகப் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள். நூல் ஆசிரியர் மஸ்கட். மு.பஷீர் அவர்கள் மஸ்கட் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளராகவும், இலக்கியச் செயலாளராகவும் செயல்பட்டவர்.

மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா

மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நாகர்கோவிலில் சென்ற 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் புத்தகத்தை வெளியிட முதல் பிரதியை முனைவர். வெ. இறையன்பு IAS அவர்கள் பெற்றுக் கொண்டார். ஆழமான சமுதாயக் கருத்துக்ககளையும், இலக்கியச் செறிவையும் கொண்ட கவிதைகளின் தொகுப்பு இப்புத்தகம் எனப் பாராட்டினார். கவிதைப் புத்தகங்கள் வெளியிடுவதில் ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சுணக்கம் பஷீரின் இந்தப் புத்தகம் மூலம் நீங்க, இது ஒரு தொடக்கமாக அமையட்டும் எனப் பாராட்டினார். கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் பாலைப் பூக்கள் தொகுப்பில் பல்வேறு கவிதைகள் சிறந்த கவிதைத் தரம் மிக்கக் கவிதைகள் எனப் பாராட்டினார். ஒருசில கவிதைவரிகளை மேற்கோள் காட்டி அதன் கவிதைச் செறிவினை எடுத்து விளக்கினார். ‘காகம்’ பற்றிய கவிதையின் சில வரிகள் இந்தக் கவிதைத் தரத்தினை மிக உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டன எனப் பாராட்டினார். விழாவுக்கு தலைமையேற்ற கோடை எப்.எம் முனைவர் சுந்தர ஆவுடையப்பன், பாலைப் பூக்களின் தரமானக் கவிதைகள் மக்களால் பேசப்படும் கவிதைகளாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை எனக் குறிப்பிட்டார். ‘கணவன்’ கவிதை ஆண்கள் மனதில் ஏற்ற வேண்டிய கவிதை எனக் குறிப்பிட்டார். தமிழகத்தில் மின்தடை பற்றிய குறுங்கவிதையும், பூக்களின் ஊர்வலம் கவிதை உட்படப் பல கவிதைகள் தரமானதும் இலக்கிய வளம் மிக்கதுமாகும் எனக் கூறினார். நன்றியுரை மற்றும் ஏற்புரையாற்றிய நூலாசிரியர் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர், தன்னுடைய கவிதை பிறப்பின் ஊன்றுகோலாக இருந்த காரணிகள், சூழல் பற்றியும், மஸ்கட்டில் இருந்தாலும் தன்னோடு இரண்டறக் கலந்துவிட்ட நாஞ்சில் மண்ணில் சிறப்புதான் கவிதை படைக்க தனக்கு வடிகாலக அமைகிறது அன்பதையும் எடுத்துக் கூறினார். வரவேற்புரையாற்றிய பேரா.அப்துல்சமது அவர்கள் நூலாசிரியரின் சிறப்பையும், நூலின் சிறப்பையும் எடுத்துக் கூறினார். விழாவில் நேஷனல் பப்ளிஷர்ஸ் உரிமையாளர் எஸ்.எஸ். ஷாஜகான், தமிழ் இஸ்லாமிய இலக்கியக் கழக நெறியாளர் கேப்டன்.அமீர்அலி, முஸ்லீம் கலைக் கல்லூரி முதல்வர் முகமது அலி, எழுத்தாளர் ஆர்னிகா நாசர், கவிஞர் ராஜாமுகமது, கொடிக்கால் ஷேக் அப்துல்லா, முன்னாள் முதல்வர். ஹசன், டாக்டர். பத்மனாபன், ஆக்ஸ்ஃபோர்ட்.அலிகான், திரு.சிவராசன், திரு.செந்தீ நடராசன், மங்காவிளை ராஜேந்திரன், மஸகட் அபுல்ஹசன், அப்துல் சலாம், மற்றும் குமரிமாவட்ட பிரபல கவிஞர்கள் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், குமரி மாவட்ட மற்றும் சென்னைப் பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். http://dinamani.com/edition_thirunelveli/kanyakumari/article1382746.ece

Wednesday, December 23, 2015

நபிகளார் பிறந்த நாள் !

நபிகளார் பிறந்த நாள் !

பாலை மானுடமலரைப்
பிரசவித்தது;
அரேபிய மணத்துடன் !

படிப்பறியாத நபிகளிடம்தான்
மானிடப் பல்கலைக்கழகங்கள்
பாடம் கற்றன !

ஏழையாகவே வாழ்ந்த
பண்பாளரிடம்தான்
அரசாட்சியே அடைக்கலம் கண்டது !

அவரின் புண்ணிய
போதனைகளால் பூவுலகே
புதுசுவாசம் கண்டது !

சமத்துவ நிழலில்
சகோதரத்துவ வெயில்
சாந்தமாய் இளைப்பாறியது !

பெண்சிசுக் கொலையும்
பெண்ணிய அடிமையும் அவரின்
கடைக்கண் பார்வையால்
கனலாய் எரிந்தன !

நபிகளார் பிறப்பு
நாணயத்தின் மறுபதிப்பு -அது
நானிலத்தின் சிறப்பு !


…..மஸ்கட் மு.பஷீர்

Friday, October 30, 2015

கவிக்கோ பவளவிழா

கவிக்கோ அப்துல்ரகுமான் என்ற மாபெரும் கவிஞரின் பவளவிழா சென்னையில் சென்ற 26 & 27 ஆம் தேதிகளில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக மிகச்சீரும் சிறப்புமாக நடந்தேறியது.
அரசியல், இலக்கியம், சினிமா, கலை, இசை, சமயம், இயல், பத்திரிக்கை & ஊடகம் என அனைத்து துறைகளையும் சார்ந்த தலைவர்கள், பிரபலங்கள், படைப்பாளிகள், கலைஞர்கள். அறிஞர்கள், சமயத் தலைவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசை இயக்குனர்கள், திரைத்துறை படைபாளிகள் மற்றும் கலைஞர், துணைவேந்தர்கள், நீதியரசர்கள், பேராசிரியர்கள், பத்திரிக்கையாசிரியர்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள், பிரபலங்கள் (இலங்கை முதல் அமெரிக்கவரை , மஸ்கட்டிலிருந்து நான்) என அனைவரும் ஓரு குடையின்கீழ் வந்து பங்கேற்று சிறப்பித்த நிகழ்வு என அனைவரும் பாராட்டும் நிகழ்ச்சியாக அமைந்தது.
மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் அனைத்து மதங்களின் பிரபலங்கள் ஆகியோரை ஒரேமடையில் அடுத்தடுத்து அமரவைக்க முடியும் என்கிற கற்பனைகெட்டாத சாதனையை நமது ‘தமிழ்’ அதாவது கவிக்கோ எனும் ‘கவிதைத் தமிழ்’ சாதித்திருக்கிறது.
கலைஞர், வீரமணி, வைகோ, தமிழிசை, காதர்முகைதீன், திருமாவளவன், பீட்டர் அல்போன்ஸ், நல்லகண்ணு, பழகருப்பையா, டி.கே.ரங்கராஜன் மற்றும் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரபலங்களும் வந்து கலந்து சிறப்பித்த காட்சி உண்மையில் ஒரு அதிசயமும், அற்புதம் தான்.
அதேபோல் சுகி.சிவம், பாலமுருகனடிமை சுவாமிகள், கஸ்பர், தேங்கை ஷர்புதீன் என மும்மதத்தைச் சார்ந்த மதப்பெரியவர்களும் மேடைய அலங்கரித்து கவிக்கோவுக்கு வாழ்த்து தெரிவித்ததும் மற்றொரு அருமையான பதிவு,



கவிக்கோ கருவூலம் நூலை கலைஞர் வெளியிட்டு வாழ்த்திப்பேசி கவிக்கோவின் பெருமைகளையும், எளிய பண்பினையும், அவருடன் கலைக்னரின் நட்பினையும் பாராட்டினார், கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிக்கோவின் கவி ஆளுமை மற்றும் திறன் பற்றிய உள்ளார்ந்த பேச்சு அனைவரையும் கவர்ந்தது.
உலகம் பாராட்டும் அமர்வில் நான் கவிக்கோவின் சிறப்புகள் பற்றிப் பேசி ஒரு கவிதையும் வாசித்தேன். என்னுடன், சிங்கப்பூர், மலேசியா, பங்காக், அமெரிக்கா, இலங்கை, துபாய், சவூதி அரேபியா எனப் பன்னாட்டு தலைவர்களும் பேசினர். முன்னதாக மலேசியா மற்றும் இலங்கை அமைச்சர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
ஒரு தமிழ்க்கவியால் அனைத்து தமிழர்களையும் வேற்றுமைகளை மறந்து ஒன்றிணைக்க முடியும் என்கிற மாபெரும் சக்தி தமிழுக்கு மட்டுமே இருக்கிறது என்பதை நிரூபிக்கும் ஒரு நிகழ்வாகும் எனச் சொல்வேன்.
என்னைப் பொறுத்த வரையில் இந்நிகழ்வு எனக்கு கிடைத்த ஒரு ‘விருது’ ஆகும்’. வாழ்க தமிழ் ! வளர்க தமிழினம் !
இன்னும் பதிவு செய்கிறேன் நிகழ்ச்சி பற்றி!
அன்புடன்
பஷீர்

Monday, September 28, 2015

தியாகத் திருநாள் !

தியாகத் திருநாள் ! 



விடிந்த இத்திருநாள் - தியாகத்தின்
வைகறைப் பிரவாகத்தின் பெருநாள் !

வல்லவன் சமிக்ஞையால்
சொல்லொணா அன்பின் மகவை
கல்போன்ற இறைநேச வலிமையால்
பலியிடச் சென்றநாளின் நினைவு !

இறைவனின் மேல்
கரையற்ற அன்பு
திரையற்ற சமுத்திரமாய்
வரையற்ற சோகம் தாய்க்கு !

அன்னை ஹாஜிராவின் துக்கம்
அருமைமகன் இஸ்மாயிலின் பக்கம்
அறுத்திடக் கத்தியும் மினுக்கம்
அருமைநபிகளின் இறையன்பின் செருக்கம் !

அன்பே உருவான இறைவன்
ஆணையிட்டான் ஆட்டின் பலியை
அன்பிற்கு ஏது அடைக்கும் தாழ்
அறிந்து அவனிடம் பணிந்திடும் நாள் !

இறைநேசர் தியாக வலிமையின் முன்
இறையின் நேசத்தில் விரிந்த பெருநாள்!
அன்பின் ஆழத்தை அகிலம் உணர்ந்திட
பண்பால் போற்றிடும் தியாகத் திருநாள் !

Friday, May 1, 2015


உழைப்பாளர் தினம் !

மேன்மைமிக்க
‘மே’ தின வாழ்த்துக்கள் !

உழைப்பின் வியர்வை
உலகத்தின் உயர்வை
உன்னிடம் தேடும்
உன்னதம் ‘மே’ தினம் !

உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனம்
உண்மை உழைப்பின்
நந்தவனம் !

சேற்றை மிதிக்கும்
உழவன் கால்கள்
சோற்றில் கைவைக்க்
உதவும் வடிகால்கள் !

சேறு மிதிபடா விட்டால்
சோறு கைதொடாது  !


உழைப்பால்
வெளியாகிறது வியர்வை !
ஒளியாகிறது உலகம் !
  
மேன்மைமிக்க
‘மே’ தின வாழ்த்துக்கள் !

அன்பன்

மு. பஷீர்

டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி & டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் மஸ்கட் நிகழ்ச்சி

டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி  & டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் மஸ்கட் நிகழ்ச்சி
மஸ்கட்டில் டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி நவநீத கிருஷ்ணன் மற்றும் டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் தம்பதியரின் மண்வாசனையோடு கிராமிய சங்கமம் நாட்டுப்புற பாடல் & நடன நிகழ்ச்சி !

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2

B. H. அப்துல் ஹமீது & பஷீர் முகம்மது

B. H. அப்துல் ஹமீது & பஷீர் முகம்மது
B. H. அப்துல் ஹமீது (பாட்டுக்கு பாட்டு) @ Muscat & பஷீர் முகம்மது

தேவா, L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு

தேவா, L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு
‘தேனிசைத் தென்றல்’ தேவா மற்றும் ‘கலைமாமணி’ L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு. சங்கத்தின் கலாச்சார மற்றும் இலக்கியச் செயலாளர் திரு. பஷீர் முகமது அவர்கள் நிகழ்ச்சித் தொகுப்புரையாற்றினார்.

பாட்டுக்கு பாட்டு @ Muscat

பாட்டுக்கு பாட்டு @ Muscat
B. H. அப்துல் ஹமீது பாட்டுக்கு பாட்டு @ Muscat & பஷீர் முகம்மது