எண்ணமும் எழுத்தும் ! வள்ளுவம் ! குறள் கூறும் அறம்! ©
தொடர்ச்சி-4 மு.பஷீர்
அழுக்கா றுஅவாவெகுளி இன்னாச்சொல்
நான்கும்
இழுக்கா இயன்றது அறம். குறள் -35
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல்
அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும் என வள்ளுவர் கூறுகிறார்.
களைய வேண்டிய இந்த நான்கு பண்புகளை விரித்துரைக்கும் முகமாக அழுக்காறாமை,
அவா அறுத்தல், வெகுளாமை, பொறையுடைமை என்ற நான்கு அதிகாரங்களை நமக்குத் தந்துள்ளார்.
மேற்சொன்ன இந்த நான்கை விட்டும் ஒருவர் நீங்கிவிட்டால் மனம் தானாகவே
தூய்மை அடைந்து விடும். காரணம் இந்த நான்கும்தான் முக்கியமாக ஒருவனுக்கு இழுக்கு உண்டாக்கும்.
மனம் என்ற ஒன்றை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் திறன்
பெற்றவர் அறத்திற்கு தீயன செய்யும் பண்புகளாக இருக்கும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்
சொல் போன்றவற்றை இலகுவாகவே கட்டுப்படுத்தும் திறன் பெற்றவர்கள் ஆகிவிடுவர்.
இந்த நான்குமட்டும்தான் ஒருவனை அறவழி நின்று விலக்குமா என்றால் இன்னபிற
செயல்களும் அடங்கும் என்பதை பிற குறள்களில் வள்ளுவர் விளக்கமாகக் கூறினாலும், இந்த
நான்கில் பிற மனமாசுகளெல்லாம் பெரும்பாலும் அடங்கிவிடும் என்பது கருத்தாகிறது.