வாழும் இசையே வாலி !
மு.பஷீர் . மஸ்கட்
‘வாலி’ எனும் இரண்டெழுத்து கவிதைச் சூரியன்…
அண்மையில் அஸ்தமித்த செய்திகேட்டு- தமிழ்
அவனியில்
கலங்காத கண்களே இல்லை !
ஐந்து தலைமுறைகளைத் தன் பேனாமையினால் கட்டிப் போட்டவர்.
பதினைந்தாயிரம் பாடல்களை திரையில் தெளித்தவர் !
மறையும் முன்புகூட சமகால இன்றைய இளைய நடிகர்களுக்காக
இளமைத் ததும்ப இசைப்பாடல்கள் வடித்தவர் !
அந்த 82-வயது ‘வாலிபக் கவிஞரின்’ தமிழ்ப்பணிக்காக மஸ்கட்
தமிழ்ச்சங்கம் ‘வாழும் இசையே வாலி – அன்றும்
இன்றும்’என்ற
‘கரோக்கி மெல்லிசை இரவினை’ செப்டம்பர் மாதம் சிறப்பாக நடத்தியது.
அந்த நிகழ்ச்சியின் நான் வழங்கிய தொகுப்புரையின் சில பகுதிகளை உங்களுடன்
பகிர்ந்துகொள்வதில் மெத்த மகிழ்ச்சியடைகிறேன் !
கவிஞர் வாலி, திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், ஓவியர், எழுத்தாளர்,
நடிகர், இயக்குனர் என பன்முக வடிவம் கொண்டவர் வாலி.
திரைப்பட உலகுக்கு அவர் ஆற்றிய பணியைப் பாராட்டினால்
அதற்கு வார்த்தைகள் மிகையாகாது.
தன்னம்பிக்கை மூலம் தரணியை ஆளலாம் என்பதற்கு
தன்னிகரற்ற உதாரணம்.
தலைமுறைகள் பல கடந்தும் தமிழ் விருந்து படைத்தளித்த
கவிப்பெரும் காவியக் கவிஞர் வாலி.
வாலி ஒரு வாலிபக் கவிஞர்..
நண்பர்கள் புடைசூழ ஜாலியாகவே இருக்கும்
பண்பட்ட கவிஞர் !
82 வயதிலும் கவிதை வடம்பிடித்த தமிழ்த் தேரோட்டி
அதனால்தான் திரையுலகமே திரண்டு விழாஎடுத்தது
அவரைப் பாராட்டி !
தமிழ்தாயை அவர் அழகுசெய்தார் சீராட்டி
கவிதை, பாடல் வார்த்தை ‘சீர்’ ஊட்டி !
தமிழ் மணம் பரப்பினார் சந்தண நீரூற்றி !
வர்ணனைகளின் முதலாளி ‘வாலி’
வார்த்தைகளைப் படிமமாக்கிப்
பின்அதை வடிவமாக்கி
கறுப்பு வெள்ளைப் படங்களுக்கு
சிறக்கும் வண்ணம் தீட்டியவர்...காரணம்
அவர் ஒரு கவிஞர்... இன்னும் ஓவியர் !
மல்லிகையை மங்கையர் ஆரமாகத் தொடுப்பதுபோல்
வார்த்தைகளை பாடல்களாகச் சரம் தொடுத்தவர்
பாடல்களின் வெற்றிக்கே உரம் கொடுத்தவர்.
எளிமைக்கு உரித்தானவர்
இதழ் சிரிப்பால் முதுமைக்கே, இளமை சேர்த்தவர் !
கடந்த கால நினைவுகளைச் சுமந்தே வாழ்ந்தவர் வாலி.
82 வயதில் 28 வயது இளமை மனத்துடன் வியக்கும் பாடல் எழுதிய
வாலிபக் கவிஞர்.
வாலியோடு போட்டிபோட்டு
முதுமையடைந்தது
வயதுதானே தவிர
வாலியல்ல !
பாமரனைச் சென்று அடைவதே, சிறந்த இலக்கியம் என்பார் வாலி. அதன்படியே கடைசி
வரை தன் பாடல்களை, எழுத்துகளை அமைத்துக்கொண்டார்.
தாய்மீது கவிஞர் கொண்ட அன்பு
தமிழ் உலகுக்கே இவர் சொன்ன பண்பு
தாய் எனும் தலைசிறந்த உறவுமுறையை
தலைமேல் வைத்து எழுதியவர்...
தாயில்லாமல் நானில்லை எனத்
தரணிக்குச் சொன்னவர் நம்மவர். அதைத்
தாரக மந்திரமாய் இசைக்கவும் வைத்தவர் !
ஆண்டவனை நேசித்தபின்
அளவற்று நாம்
நேசிக்கும்
அற்புத உறவுதான் அம்மா எனும் ஜீவ உறவு.
அவரின் அம்மாப் பாடல்கள் கேட்டு
அதிசயப் படாத அன்னையரும் இல்லை...
மனம் கலங்காத மாந்தரும் இல்லை !
அதனால் தானம்மா
அம்மாபற்றிய எண்ணற்ற பாடல்களை
அவர் இயற்றினாரம்மா !
இளமைக் கொஞ்சும்
இன்பம் கெஞ்சும்
காதல் கவிரசம் விஞ்சும்
கற்பனைகள்கூட இவரின்
சொற்புனைவின் திறன்பார்த்து அஞ்சும் !
கவித் திறனுக்கா இவர் பாடலில் பஞ்சம்
கேட்டு என்றென்றும் ரசிக்கட்டுமே நம் நெஞ்சம் !
வாழும் கவிஞராகவே வாலி இன்றும் நம்மோடு வாழ்கிறார்...
என்றும் வாழ்கிறார்.
உடலால் மட்டுமே பிரிந்தாலும் பாட்டால் நம்மோடு நித்தமும்,
பங்காளியாகவே இருக்கிறார் பாட்டுலக மன்னர் வாலி
! நின் புகழ் வாழி !
அன்பன்
மு. பஷீர்
No comments:
Post a Comment