மஸ்கட்டில் ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் வெளியீடு

மஸ்கட்டில் ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் வெளியீடு
மஸ்கட்: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் ‘தேனிசைத் தென்றல்’ திரு. தேவா அவர்களால் வெளியிடப்பட்டது. பிரபல இசையமைப்பாளர் கலைமாமணி, ‘தேனிசைத் தென்றல்’ திரு.தேவா அவர்கள் புத்தகத்தை வெளியிட பிரபல திரைப்பட நடிகை கலைமாமணி குமாரி. சச்சு அவர்கள் புத்தகப் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள். நூல் ஆசிரியர் மஸ்கட். மு.பஷீர் அவர்கள் மஸ்கட் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளராகவும், இலக்கியச் செயலாளராகவும் செயல்பட்டவர்.

மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா

மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நாகர்கோவிலில் சென்ற 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் புத்தகத்தை வெளியிட முதல் பிரதியை முனைவர். வெ. இறையன்பு IAS அவர்கள் பெற்றுக் கொண்டார். ஆழமான சமுதாயக் கருத்துக்ககளையும், இலக்கியச் செறிவையும் கொண்ட கவிதைகளின் தொகுப்பு இப்புத்தகம் எனப் பாராட்டினார். கவிதைப் புத்தகங்கள் வெளியிடுவதில் ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சுணக்கம் பஷீரின் இந்தப் புத்தகம் மூலம் நீங்க, இது ஒரு தொடக்கமாக அமையட்டும் எனப் பாராட்டினார். கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் பாலைப் பூக்கள் தொகுப்பில் பல்வேறு கவிதைகள் சிறந்த கவிதைத் தரம் மிக்கக் கவிதைகள் எனப் பாராட்டினார். ஒருசில கவிதைவரிகளை மேற்கோள் காட்டி அதன் கவிதைச் செறிவினை எடுத்து விளக்கினார். ‘காகம்’ பற்றிய கவிதையின் சில வரிகள் இந்தக் கவிதைத் தரத்தினை மிக உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டன எனப் பாராட்டினார். விழாவுக்கு தலைமையேற்ற கோடை எப்.எம் முனைவர் சுந்தர ஆவுடையப்பன், பாலைப் பூக்களின் தரமானக் கவிதைகள் மக்களால் பேசப்படும் கவிதைகளாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை எனக் குறிப்பிட்டார். ‘கணவன்’ கவிதை ஆண்கள் மனதில் ஏற்ற வேண்டிய கவிதை எனக் குறிப்பிட்டார். தமிழகத்தில் மின்தடை பற்றிய குறுங்கவிதையும், பூக்களின் ஊர்வலம் கவிதை உட்படப் பல கவிதைகள் தரமானதும் இலக்கிய வளம் மிக்கதுமாகும் எனக் கூறினார். நன்றியுரை மற்றும் ஏற்புரையாற்றிய நூலாசிரியர் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர், தன்னுடைய கவிதை பிறப்பின் ஊன்றுகோலாக இருந்த காரணிகள், சூழல் பற்றியும், மஸ்கட்டில் இருந்தாலும் தன்னோடு இரண்டறக் கலந்துவிட்ட நாஞ்சில் மண்ணில் சிறப்புதான் கவிதை படைக்க தனக்கு வடிகாலக அமைகிறது அன்பதையும் எடுத்துக் கூறினார். வரவேற்புரையாற்றிய பேரா.அப்துல்சமது அவர்கள் நூலாசிரியரின் சிறப்பையும், நூலின் சிறப்பையும் எடுத்துக் கூறினார். விழாவில் நேஷனல் பப்ளிஷர்ஸ் உரிமையாளர் எஸ்.எஸ். ஷாஜகான், தமிழ் இஸ்லாமிய இலக்கியக் கழக நெறியாளர் கேப்டன்.அமீர்அலி, முஸ்லீம் கலைக் கல்லூரி முதல்வர் முகமது அலி, எழுத்தாளர் ஆர்னிகா நாசர், கவிஞர் ராஜாமுகமது, கொடிக்கால் ஷேக் அப்துல்லா, முன்னாள் முதல்வர். ஹசன், டாக்டர். பத்மனாபன், ஆக்ஸ்ஃபோர்ட்.அலிகான், திரு.சிவராசன், திரு.செந்தீ நடராசன், மங்காவிளை ராஜேந்திரன், மஸகட் அபுல்ஹசன், அப்துல் சலாம், மற்றும் குமரிமாவட்ட பிரபல கவிஞர்கள் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், குமரி மாவட்ட மற்றும் சென்னைப் பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். http://dinamani.com/edition_thirunelveli/kanyakumari/article1382746.ece

Tuesday, October 9, 2018

எண்ணமும் எழுத்தும் ! வள்ளுவம் ! குறள் கூறும் அறம்! © தொடர்ச்சி மு.பஷீர்


எண்ணமும் எழுத்தும் ! வள்ளுவம் ! குறள் கூறும் அறம்!  ©
தொடர்ச்சி-4                       மு.பஷீர்

அழுக்கா றுஅவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.     குறள் -35

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும் என வள்ளுவர் கூறுகிறார்.

களைய வேண்டிய இந்த நான்கு பண்புகளை விரித்துரைக்கும் முகமாக அழுக்காறாமை, அவா அறுத்தல், வெகுளாமை, பொறையுடைமை என்ற நான்கு அதிகாரங்களை நமக்குத் தந்துள்ளார்.

மேற்சொன்ன இந்த நான்கை விட்டும் ஒருவர் நீங்கிவிட்டால் மனம் தானாகவே தூய்மை அடைந்து விடும். காரணம் இந்த நான்கும்தான் முக்கியமாக ஒருவனுக்கு இழுக்கு உண்டாக்கும்.


மனம் என்ற ஒன்றை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் திறன் பெற்றவர் அறத்திற்கு தீயன செய்யும் பண்புகளாக இருக்கும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் போன்றவற்றை இலகுவாகவே கட்டுப்படுத்தும் திறன் பெற்றவர்கள் ஆகிவிடுவர்.

இந்த நான்குமட்டும்தான் ஒருவனை அறவழி நின்று விலக்குமா என்றால் இன்னபிற செயல்களும் அடங்கும் என்பதை பிற குறள்களில் வள்ளுவர் விளக்கமாகக் கூறினாலும், இந்த நான்கில் பிற மனமாசுகளெல்லாம் பெரும்பாலும் அடங்கிவிடும் என்பது கருத்தாகிறது.


Thursday, September 27, 2018

எண்ணமும் எழுத்தும் ! வள்ளுவம் ! குறள் கூறும் அறம்! © தொடர்ச்சி-4 மு.பஷீர்


அறம் என்பது சமுதாயத்தின் வழிவழியாய் வருகிற உயர் நிலைப் பண்பெனக் கொண்டோமானால், அது நமது தமிழ்க் கலாச்சாரத்துடன் காவலாய் என்னாளும் இருந்து வந்திருக்கிறதென்பது என்ற உண்மையையும் நாம் அறியவேண்டும்.
அது காலத்துக்குக் காலம் தன்னை மெருகேற்றிக் கொண்டிருந்தது என்பது கண்கூடான உண்மை.

தமிழர்களின் சிறந்த பண்பாட்டுமுறைகள் தனிமனித, சமுதாய முன்னேற்றத்துக்கான காரணிகளாகப் பயன்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் காலம் சார்ந்த ஒன்றாகவே பெரும்பாலும் இருந்துள்ளன. ஆகவே அறம் என்பதுகூட காலம் சார்ந்த ஒன்றாகவே இருந்துவந்துள்ளது.

பரத்தமை ஒழுக்கம், கள்ளுண்ணுதல் போன்றவை சங்க இலக்கியங்களில் கடிந்து பேசப்படாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமைந்ததைக் காணும்போது, வள்ளுவப் பெருந்தகை அதனை ஆணித்தரமாக அவற்றை கைவிடச்சொல்லும் முறைகள் அறத்தின் காலம் சார்ந்த மெருகேற்றத்தை நமக்கு உணர்த்துகிறது.

'பிறன் மனை நோக்காத பேராண்மை' என்று சொல்லி ஆணுக்கான அறவொழுக்கத்தை நிர்ணயித்தார். தனது மனைவியை விடுத்துப் பிற பெண்களுடனான தொடர்பினை, பரத்தையர் தொடர்பினை ஒழுக்கமற்ற செயலாகக் கண்டித்தார் வள்ளுவர்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.  – குறள் 34

ஒருவன் தன் மனத்தில் குற்றமற்றவனாக இருக்க வேண்டும். அறம் என்பது அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவையெல்லாம் ஆரவாரத் தன்மை உடையவை என்பார் மு.வ.

உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருந்து, ஆர்ப்பாட்டம் இன்றி, அறம் செய்து வந்தாலே போதும். மனம் சார்ந்து பிறப்பதுதான் அறம். ஆகவே மனம் சுத்தமானதாக இருந்துவிட்டால் செய்யும் செயல்களெல்லாம் அறமாகவே அமையும்.
ஆம் உள்ளத்தில் குற்றம் இல்லாது இருத்தலே அறமாம். 

வள்ளுவர் கூறும் அறன் வலியுறுத்தலின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்.


மனிதனின் அனைத்து செயல்களும் பிறப்பது எண்ணங்கள் மூலம்தானே.
எண்ணம்தானே எல்லாக் காரியங்களுக்கும் ஊற்றாய் அமைகிறது.
ஆகவேதான் அத்தகைய எண்ணத்தை, மனத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் அதன்மூலம் எல்லாக் கட்டுப்பாடுகளும் அதனுள் அடங்கிவிடுமல்லவா..!

இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற. – குறள்-34

ஒருவன் தன் மனத்தில் குற்றமற்றவனாக இருக்க வேண்டும். அறம் என்பது அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவையெல்லாம் ஆரவாரத் தன்மை உடையவை ( மு.வ உரை).

அதாவது மனதை மாசற்றதாக ஆக்கிக்கொள் என அறிவுரை தருகிறார் நமக்கு. மனம் மாசற்றதாக ஆகிவிடும்போது எல்லாமும் நன்மையாகிவிடுகிறது.

வள்ளுவர் சொன்ன இதேக் கருத்தை உள்ளடக்கித்தான்;

'சினமடக்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும்
மனமடக்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே!’
எனத் தாயுமானவரும் கேட்கிறார்.

ஆனால் மனம் களங்கப்பட்டதாக இருக்கும்போது அது இழிவான செயல்களையே செய்ய நம்மை முற்படுத்தும்.  மனம் சுத்தமாகாமல் உடலும், உடையும் சுத்தமாகச் சென்று, மனதுக்குள் கெட்டவற்றை எண்ணி இறைவனை வழிபட்டால், நம்முடைய பிரார்த்த்னைகளை இறைவன் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்பதே உண்மை.


Friday, September 21, 2018

எண்ணமும் எழுத்தும் ! வள்ளுவம் ! குறள் கூறும் அறம்!


எண்ணமும் எழுத்தும் !
வள்ளுவம் !
குறள் கூறும் அறம்!

தமிழ் மொழிக்கும், தமிழன் வாழ்வு நெறிக்கும், தமிழ் கலாச்சாரத்துக்கும், தமிழ் இலக்கியத்துக்குமாக, மதம் சாராதா, எல்லா மனித குலத்துக்கும் ஏற்ற ஒரு பொது மறையாக, நீதி நூலாக, எக்காலத்துக்கும் எல்லா மனிதகுலமும் ஏற்று மகிழும், போற்றி மகிழும், வாழ்வு நெறியாய்க் கொண்டு மகிழும் ஒரு தமிழ் இலக்கிய நீதிநூல் என்றால் அது ‘திருக்குறள்’ என்று பெருமையுற நாம் சொல்லிக் கொள்ளலாம்.

அத்தகைய சிறப்பான திருக்குறளில் ஒரு மையக்கருவாக அமைந்திருப்பது ‘அறம்’ என்பதாகும். ஆகவே ‘குறள் கூறும் அறம்’ எனும் தலைப்பில் திருக்குறளில் புதைந்து கிடைக்கும் அறனையும், அறன் சார்ந்த  நெறிகளையும் பாடப் பொருளாய்க் கொண்டு ‘குறள் கூறும் அறம்’ என தமிழ்ச்சங்க திருக்குறள் வகுப்பில் பாடமாய் ஆய்ந்தறிந்து விளக்கி வருகிறேன் வாரம் தோறும்.

‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு’
எனத்தாங்கி, ஆழமும் அகலுமாய், தோண்டத்தோண்ட புதையலாய், புதுப்புது வண்ணங்களில், வள்ளுவப் பெருந்தகையின் குறள் கருத்துக்கள், அள்ள அள்ளக் குறையாது புதுப்புது எண்ணங்களில் ஊற்றாய் பெருக்கெடுத்து சிறக்கிறது. இது திருக்குறளுக்கேயான சிறப்பென்றால் மிகையாகாது.

குறளின் சிறப்பே சுருங்கச்சொல்லி விளங்கவைக்கும் பாங்குதானே!
அதனால்தானே ஔவையார்,
"அணுவைத்துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத்தறித்தது குறள் "எனக் கூறி திருக்குறளின் சொல் மற்றும் பொருளின் ஆழத்தை பெருமையுடன் எடுத்துக் கூறுகிறார்!.

அத்தகைய சிறப்புமிகு திருக்குறள் வாழ்வின் எல்லா நிலைகளிலும் மனிதன் வாழ வேண்டிய நெறிகளை இலகுவாகவும், ஆழமாகவும், அதே நேரத்தில் வலியுறுத்தியும் சிறப்பாகக் கூறிவருகிறது.
மனிதன் மேம்பட்ட மனிதனாக வாழ அறனை வலியுறுத்துகிறது. அந்த அடிப்படையில்,  நாமும் அறன் வலியுறுத்தலில் தொடங்கி, அழுக்காறாமை, ஒழுக்கமுடைமை, அவா அறுத்தல், ஒழுக்கமுடைமை, வெகுளாமை, பொறையுடைமை, கூடா ஒழுக்கம், அன்புடைமையையும், அருளுடைமையையும், மெய்யுணர்தல் என்ற வரிசையில் பயணிக்கிறோம்.

வரும் பதிவுகளில் இந்த வரிசையில் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்!.


Friday, June 29, 2018

கவிக்கோ அப்துல்ரகுமான் புதுக்கவிதையுலகின்
புவிக்கோ
புவியுலகில் மெய்யுடலால்
நம்மை விட்டு ‘அகன்ற’
இந்நாளில், நினைவுகளெல்லாம்
அவருடன் மனமொத்துப் பழகிய
அழகிய நாட்கள் நெஞ்சில்
ஈரமாய் என்றென்றும், இன்றும்.. .!
நினைவுகளின் தொடரலைகள்
உங்களுடன் ... !

......................................................................
கவிக்கோ ஒரு இலக்கியப் புவிக்கோ!
கவிக்கோ நீ
கண்ணியக் கடலில்
விளைந்த பவளம் !
தொப்பியை கழற்றினால் மட்டும்
தலை கவிழ்கிறது உன் பேனா
வார்த்தைகளுக்கு !
வாடிய கவியுலகில்
தேடியபோது
தேடாமலே
ஓடிய வைகைக்கரைதொட்டு
பாடியே வந்துதித்த கவிக்கோ !
உன்னை வாசித்தால்
பொற்கோவை இதழ் மடியும்
பால்கோவாவின் சுவை வடிவம் !
தட்டிலே மட்டும் அழகாய்
பட்டினில் பொதிந்த கவிதையை
சுட்டிடும் அழகு தீபமாக்கி
விட்டிலாய் தமிழர்களை
சுட்டிட அழகு பார்த்தவர் !
சேற்றுக்கு மேல் நின்றாடும்
நாற்றுக்கு நளினமாய்
காற்றுக்கே கவிதை பாட
கற்றுத்தந்த காற்றாடி !
பண்டிதர் மட்டுமே படித்து
ஒண்டியாய் இழுத்த தமிழ்த்தேரை
புதுக்கவிதை வடம் பூட்டி
பாமரனுடன் உலாவரவைத்த கவிக்கோ !
நீயோ
தலைக்கனமற்ற புள்ளி
எளியவரும் வறியவரும்
எப்பொழுதும் தேடிவரும்
பெரும் புள்ளி !
நேர்மையும் தர்மமும்
நித்தமும் நீதொழும் பள்ளி !
என்போன்ற தமிழ்க்கவிதை
ஆர்வலருக்கு நீ ஒரு
தமிழ்ப்பள்ளி !
அறிவுசார் கவிஞர்க்கோ
கல்விச்சாலையின் தரமான
தனிப்பள்ளி !
இன்னும் தொட்டுப்பார்த்து
ரசிக்க நினைக்கும்
தமிழ்த்தோழி !
கவிதை எழுத என்
பேனா நினைக்கும்
போதெல்லாம்
வருகிறாய் நீ ஒரேஒரு
விடிவெள்ளி !
நீ கவிதை விஞ்ஞானி
இலக்கியப் பொறியாளர்
செந்தமிழ் ஓடத்தை
உந்த வைத்து ஓட்டிய
புதுக்கவிதைத் துடுப்பு !
கவிதைப் பட்டறையில்
கனன்ற ‘படிம’ உருக்கு !
வார்த்தை இருப்புக்களை
புதுப்பொலிவால்
புடம்போட்டு கூராக்கியவன் !
யாப்பையும் தளையையும்
‘காப்பு’க் கட்டிவத்து
புதுக்கவிதைத் திருவிழாவுக்கு
புதுமரத்தில்
கொடியேற்றியவன் !
கண(நேரத்)த்துக்குக்
கணக்கு பார்த்துக்
கவிதை வார்த்தைகள்
வர்த்தகமாகும்
வெள்ளித்திரைச் சந்தையில்
பணத்துக்கு
விலை போகாதது
உன்பேனா !
நீ கண்ட நல்ல தமிழ்க்கனவுகள்
நிஜமாய் பலிக்கட்டும்
நிறைவாய் தமிழ்த்தாயின்
தமிழமுது வற்றாது சுரக்கட்டும் !
உன் நினைவுகளால்
என்றென்றும் ...
மு. பஷீர்

டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி & டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் மஸ்கட் நிகழ்ச்சி

டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி  & டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் மஸ்கட் நிகழ்ச்சி
மஸ்கட்டில் டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி நவநீத கிருஷ்ணன் மற்றும் டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் தம்பதியரின் மண்வாசனையோடு கிராமிய சங்கமம் நாட்டுப்புற பாடல் & நடன நிகழ்ச்சி !

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2

B. H. அப்துல் ஹமீது & பஷீர் முகம்மது

B. H. அப்துல் ஹமீது & பஷீர் முகம்மது
B. H. அப்துல் ஹமீது (பாட்டுக்கு பாட்டு) @ Muscat & பஷீர் முகம்மது

தேவா, L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு

தேவா, L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு
‘தேனிசைத் தென்றல்’ தேவா மற்றும் ‘கலைமாமணி’ L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு. சங்கத்தின் கலாச்சார மற்றும் இலக்கியச் செயலாளர் திரு. பஷீர் முகமது அவர்கள் நிகழ்ச்சித் தொகுப்புரையாற்றினார்.

பாட்டுக்கு பாட்டு @ Muscat

பாட்டுக்கு பாட்டு @ Muscat
B. H. அப்துல் ஹமீது பாட்டுக்கு பாட்டு @ Muscat & பஷீர் முகம்மது