மஸ்கட்டில் ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் வெளியீடு

மஸ்கட்டில் ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் வெளியீடு
மஸ்கட்: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் ‘தேனிசைத் தென்றல்’ திரு. தேவா அவர்களால் வெளியிடப்பட்டது. பிரபல இசையமைப்பாளர் கலைமாமணி, ‘தேனிசைத் தென்றல்’ திரு.தேவா அவர்கள் புத்தகத்தை வெளியிட பிரபல திரைப்பட நடிகை கலைமாமணி குமாரி. சச்சு அவர்கள் புத்தகப் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள். நூல் ஆசிரியர் மஸ்கட். மு.பஷீர் அவர்கள் மஸ்கட் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளராகவும், இலக்கியச் செயலாளராகவும் செயல்பட்டவர்.

மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா

மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நாகர்கோவிலில் சென்ற 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் புத்தகத்தை வெளியிட முதல் பிரதியை முனைவர். வெ. இறையன்பு IAS அவர்கள் பெற்றுக் கொண்டார். ஆழமான சமுதாயக் கருத்துக்ககளையும், இலக்கியச் செறிவையும் கொண்ட கவிதைகளின் தொகுப்பு இப்புத்தகம் எனப் பாராட்டினார். கவிதைப் புத்தகங்கள் வெளியிடுவதில் ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சுணக்கம் பஷீரின் இந்தப் புத்தகம் மூலம் நீங்க, இது ஒரு தொடக்கமாக அமையட்டும் எனப் பாராட்டினார். கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் பாலைப் பூக்கள் தொகுப்பில் பல்வேறு கவிதைகள் சிறந்த கவிதைத் தரம் மிக்கக் கவிதைகள் எனப் பாராட்டினார். ஒருசில கவிதைவரிகளை மேற்கோள் காட்டி அதன் கவிதைச் செறிவினை எடுத்து விளக்கினார். ‘காகம்’ பற்றிய கவிதையின் சில வரிகள் இந்தக் கவிதைத் தரத்தினை மிக உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டன எனப் பாராட்டினார். விழாவுக்கு தலைமையேற்ற கோடை எப்.எம் முனைவர் சுந்தர ஆவுடையப்பன், பாலைப் பூக்களின் தரமானக் கவிதைகள் மக்களால் பேசப்படும் கவிதைகளாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை எனக் குறிப்பிட்டார். ‘கணவன்’ கவிதை ஆண்கள் மனதில் ஏற்ற வேண்டிய கவிதை எனக் குறிப்பிட்டார். தமிழகத்தில் மின்தடை பற்றிய குறுங்கவிதையும், பூக்களின் ஊர்வலம் கவிதை உட்படப் பல கவிதைகள் தரமானதும் இலக்கிய வளம் மிக்கதுமாகும் எனக் கூறினார். நன்றியுரை மற்றும் ஏற்புரையாற்றிய நூலாசிரியர் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர், தன்னுடைய கவிதை பிறப்பின் ஊன்றுகோலாக இருந்த காரணிகள், சூழல் பற்றியும், மஸ்கட்டில் இருந்தாலும் தன்னோடு இரண்டறக் கலந்துவிட்ட நாஞ்சில் மண்ணில் சிறப்புதான் கவிதை படைக்க தனக்கு வடிகாலக அமைகிறது அன்பதையும் எடுத்துக் கூறினார். வரவேற்புரையாற்றிய பேரா.அப்துல்சமது அவர்கள் நூலாசிரியரின் சிறப்பையும், நூலின் சிறப்பையும் எடுத்துக் கூறினார். விழாவில் நேஷனல் பப்ளிஷர்ஸ் உரிமையாளர் எஸ்.எஸ். ஷாஜகான், தமிழ் இஸ்லாமிய இலக்கியக் கழக நெறியாளர் கேப்டன்.அமீர்அலி, முஸ்லீம் கலைக் கல்லூரி முதல்வர் முகமது அலி, எழுத்தாளர் ஆர்னிகா நாசர், கவிஞர் ராஜாமுகமது, கொடிக்கால் ஷேக் அப்துல்லா, முன்னாள் முதல்வர். ஹசன், டாக்டர். பத்மனாபன், ஆக்ஸ்ஃபோர்ட்.அலிகான், திரு.சிவராசன், திரு.செந்தீ நடராசன், மங்காவிளை ராஜேந்திரன், மஸகட் அபுல்ஹசன், அப்துல் சலாம், மற்றும் குமரிமாவட்ட பிரபல கவிஞர்கள் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், குமரி மாவட்ட மற்றும் சென்னைப் பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். http://dinamani.com/edition_thirunelveli/kanyakumari/article1382746.ece

Sunday, June 7, 2020

கவிக்கோ நினைவு பன்னாட்டுக் கவிக்கூடல்.

கவிக்கோ நினைவு பன்னாட்டுக் கவிக்கூடல்.
புதுக்கவிதை உலகின் முடிசூடா மன்னனாகக் கோலோச்சிய கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுடைய நினைவை ஒட்டி 'கவிக்கோ கவித் தமிழின் புவிக்கோ' என்கிற பன்னாட்டு கவிக்கூடல் இன்று நான் தலைமைக் கவியாகப் பொறுப்பேற்க, சிறப்பாக நடந்தேறியது.
மலேசியா,அமீரகம் இந்தியா மற்றும் மஸ்கட் ஓமான் என பன்னாட்டுத் தமிழ் கவிமாமணிகள் பங்கேற்ற இந்த நிகழ்வு வெற்றிகரமாக, மிகச் சிறப்பாக நடந்தேறியது.
காணொலி வழி நடந்தாலும்... கண்ணெதிரே நடந்த கற்கண்டுக் கவியரங்கம் என சொற்கொண்டு வாழ்த்திய காட்சியாளர்களுக்கு,
பங்கேற்று சிறப்பித்தவர்களுக்கு என் முதல் நன்றி.
கவி உலகின் கோமானாக விளங்கிய கவிக்கோ பற்றியும், அவரின் படைப்புகள், அவர் தமிழுக்கு ஆற்றிய பணி, தமிழ் கவிதை உலகுக்கு செய்த பணி என ஆய்ந்தறிந்து, ஆழமான, அற்புதமான தங்கள் கவிதைகளால் அவருக்கு நினைவு அலங்காரம் செய்து சிறப்பித்த
கவிமாமணிகள்; மலேசியா, ராதிகா ஹரீஷ், மஸ்கட்டிலிருந்து கவிஞர்கள். அபுல் ஹசன், இளமுகில். அமுதவன் (எ) முனைவர்.அமுதக் கண்ணன், தருமாம்பாள் சீனிவசன், தளபதி மற்றும் காமில்கனி, துபாய் அமீரகத்திலிருந்து கல்லிடை ஆ. முகமது முகைதீன் மற்றும் இந்தியாவிலிருந்து தஞ்சை. இரா.சாந்தி, ஹிதாயதுல்லாஹ், சுதா கிரிதரன் பங்கேற்று வெகு விமரிசையாகத் தங்கள் கவிதைகளை அரங்கேற்றினர்.


முன்னுரை வழங்கிய முனைவர்.அப்துல்சமது, வரவேற்று சிறப்பித்த திரு.சீனிவாசன், உடனிருந்து உயர்வான பணிகள் செய்த கணினிக்குழு நண்பர்கள் Dr.சிவா, ராமசாமி, கருணாநிதி, ஜெய்கணேஷ் மற்றும் அண்ணன் அபுல் ஹசன் அனைவருக்கும், முத்தமிழால் தித்திக்கும் மனதோடு கொத்தான நன்றிகள்.
இந்த நிகழ்வின் ஒளிஒலி வடிவத்தை விரைவில் உங்களுடன் பகிர்கிறேன்.

Tuesday, October 9, 2018

எண்ணமும் எழுத்தும் ! வள்ளுவம் ! குறள் கூறும் அறம்! © தொடர்ச்சி மு.பஷீர்


எண்ணமும் எழுத்தும் ! வள்ளுவம் ! குறள் கூறும் அறம்!  ©
தொடர்ச்சி-4                       மு.பஷீர்

அழுக்கா றுஅவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.     குறள் -35

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும் என வள்ளுவர் கூறுகிறார்.

களைய வேண்டிய இந்த நான்கு பண்புகளை விரித்துரைக்கும் முகமாக அழுக்காறாமை, அவா அறுத்தல், வெகுளாமை, பொறையுடைமை என்ற நான்கு அதிகாரங்களை நமக்குத் தந்துள்ளார்.

மேற்சொன்ன இந்த நான்கை விட்டும் ஒருவர் நீங்கிவிட்டால் மனம் தானாகவே தூய்மை அடைந்து விடும். காரணம் இந்த நான்கும்தான் முக்கியமாக ஒருவனுக்கு இழுக்கு உண்டாக்கும்.


மனம் என்ற ஒன்றை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் திறன் பெற்றவர் அறத்திற்கு தீயன செய்யும் பண்புகளாக இருக்கும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் போன்றவற்றை இலகுவாகவே கட்டுப்படுத்தும் திறன் பெற்றவர்கள் ஆகிவிடுவர்.

இந்த நான்குமட்டும்தான் ஒருவனை அறவழி நின்று விலக்குமா என்றால் இன்னபிற செயல்களும் அடங்கும் என்பதை பிற குறள்களில் வள்ளுவர் விளக்கமாகக் கூறினாலும், இந்த நான்கில் பிற மனமாசுகளெல்லாம் பெரும்பாலும் அடங்கிவிடும் என்பது கருத்தாகிறது.


Thursday, September 27, 2018

எண்ணமும் எழுத்தும் ! வள்ளுவம் ! குறள் கூறும் அறம்! © தொடர்ச்சி-4 மு.பஷீர்


அறம் என்பது சமுதாயத்தின் வழிவழியாய் வருகிற உயர் நிலைப் பண்பெனக் கொண்டோமானால், அது நமது தமிழ்க் கலாச்சாரத்துடன் காவலாய் என்னாளும் இருந்து வந்திருக்கிறதென்பது என்ற உண்மையையும் நாம் அறியவேண்டும்.
அது காலத்துக்குக் காலம் தன்னை மெருகேற்றிக் கொண்டிருந்தது என்பது கண்கூடான உண்மை.

தமிழர்களின் சிறந்த பண்பாட்டுமுறைகள் தனிமனித, சமுதாய முன்னேற்றத்துக்கான காரணிகளாகப் பயன்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் காலம் சார்ந்த ஒன்றாகவே பெரும்பாலும் இருந்துள்ளன. ஆகவே அறம் என்பதுகூட காலம் சார்ந்த ஒன்றாகவே இருந்துவந்துள்ளது.

பரத்தமை ஒழுக்கம், கள்ளுண்ணுதல் போன்றவை சங்க இலக்கியங்களில் கடிந்து பேசப்படாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமைந்ததைக் காணும்போது, வள்ளுவப் பெருந்தகை அதனை ஆணித்தரமாக அவற்றை கைவிடச்சொல்லும் முறைகள் அறத்தின் காலம் சார்ந்த மெருகேற்றத்தை நமக்கு உணர்த்துகிறது.

'பிறன் மனை நோக்காத பேராண்மை' என்று சொல்லி ஆணுக்கான அறவொழுக்கத்தை நிர்ணயித்தார். தனது மனைவியை விடுத்துப் பிற பெண்களுடனான தொடர்பினை, பரத்தையர் தொடர்பினை ஒழுக்கமற்ற செயலாகக் கண்டித்தார் வள்ளுவர்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.  – குறள் 34

ஒருவன் தன் மனத்தில் குற்றமற்றவனாக இருக்க வேண்டும். அறம் என்பது அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவையெல்லாம் ஆரவாரத் தன்மை உடையவை என்பார் மு.வ.

உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருந்து, ஆர்ப்பாட்டம் இன்றி, அறம் செய்து வந்தாலே போதும். மனம் சார்ந்து பிறப்பதுதான் அறம். ஆகவே மனம் சுத்தமானதாக இருந்துவிட்டால் செய்யும் செயல்களெல்லாம் அறமாகவே அமையும்.
ஆம் உள்ளத்தில் குற்றம் இல்லாது இருத்தலே அறமாம். 

வள்ளுவர் கூறும் அறன் வலியுறுத்தலின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்.


மனிதனின் அனைத்து செயல்களும் பிறப்பது எண்ணங்கள் மூலம்தானே.
எண்ணம்தானே எல்லாக் காரியங்களுக்கும் ஊற்றாய் அமைகிறது.
ஆகவேதான் அத்தகைய எண்ணத்தை, மனத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் அதன்மூலம் எல்லாக் கட்டுப்பாடுகளும் அதனுள் அடங்கிவிடுமல்லவா..!

இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற. – குறள்-34

ஒருவன் தன் மனத்தில் குற்றமற்றவனாக இருக்க வேண்டும். அறம் என்பது அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவையெல்லாம் ஆரவாரத் தன்மை உடையவை ( மு.வ உரை).

அதாவது மனதை மாசற்றதாக ஆக்கிக்கொள் என அறிவுரை தருகிறார் நமக்கு. மனம் மாசற்றதாக ஆகிவிடும்போது எல்லாமும் நன்மையாகிவிடுகிறது.

வள்ளுவர் சொன்ன இதேக் கருத்தை உள்ளடக்கித்தான்;

'சினமடக்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும்
மனமடக்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே!’
எனத் தாயுமானவரும் கேட்கிறார்.

ஆனால் மனம் களங்கப்பட்டதாக இருக்கும்போது அது இழிவான செயல்களையே செய்ய நம்மை முற்படுத்தும்.  மனம் சுத்தமாகாமல் உடலும், உடையும் சுத்தமாகச் சென்று, மனதுக்குள் கெட்டவற்றை எண்ணி இறைவனை வழிபட்டால், நம்முடைய பிரார்த்த்னைகளை இறைவன் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்பதே உண்மை.


Friday, September 21, 2018

எண்ணமும் எழுத்தும் ! வள்ளுவம் ! குறள் கூறும் அறம்!


எண்ணமும் எழுத்தும் !
வள்ளுவம் !
குறள் கூறும் அறம்!

தமிழ் மொழிக்கும், தமிழன் வாழ்வு நெறிக்கும், தமிழ் கலாச்சாரத்துக்கும், தமிழ் இலக்கியத்துக்குமாக, மதம் சாராதா, எல்லா மனித குலத்துக்கும் ஏற்ற ஒரு பொது மறையாக, நீதி நூலாக, எக்காலத்துக்கும் எல்லா மனிதகுலமும் ஏற்று மகிழும், போற்றி மகிழும், வாழ்வு நெறியாய்க் கொண்டு மகிழும் ஒரு தமிழ் இலக்கிய நீதிநூல் என்றால் அது ‘திருக்குறள்’ என்று பெருமையுற நாம் சொல்லிக் கொள்ளலாம்.

அத்தகைய சிறப்பான திருக்குறளில் ஒரு மையக்கருவாக அமைந்திருப்பது ‘அறம்’ என்பதாகும். ஆகவே ‘குறள் கூறும் அறம்’ எனும் தலைப்பில் திருக்குறளில் புதைந்து கிடைக்கும் அறனையும், அறன் சார்ந்த  நெறிகளையும் பாடப் பொருளாய்க் கொண்டு ‘குறள் கூறும் அறம்’ என தமிழ்ச்சங்க திருக்குறள் வகுப்பில் பாடமாய் ஆய்ந்தறிந்து விளக்கி வருகிறேன் வாரம் தோறும்.

‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு’
எனத்தாங்கி, ஆழமும் அகலுமாய், தோண்டத்தோண்ட புதையலாய், புதுப்புது வண்ணங்களில், வள்ளுவப் பெருந்தகையின் குறள் கருத்துக்கள், அள்ள அள்ளக் குறையாது புதுப்புது எண்ணங்களில் ஊற்றாய் பெருக்கெடுத்து சிறக்கிறது. இது திருக்குறளுக்கேயான சிறப்பென்றால் மிகையாகாது.

குறளின் சிறப்பே சுருங்கச்சொல்லி விளங்கவைக்கும் பாங்குதானே!
அதனால்தானே ஔவையார்,
"அணுவைத்துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத்தறித்தது குறள் "எனக் கூறி திருக்குறளின் சொல் மற்றும் பொருளின் ஆழத்தை பெருமையுடன் எடுத்துக் கூறுகிறார்!.

அத்தகைய சிறப்புமிகு திருக்குறள் வாழ்வின் எல்லா நிலைகளிலும் மனிதன் வாழ வேண்டிய நெறிகளை இலகுவாகவும், ஆழமாகவும், அதே நேரத்தில் வலியுறுத்தியும் சிறப்பாகக் கூறிவருகிறது.
மனிதன் மேம்பட்ட மனிதனாக வாழ அறனை வலியுறுத்துகிறது. அந்த அடிப்படையில்,  நாமும் அறன் வலியுறுத்தலில் தொடங்கி, அழுக்காறாமை, ஒழுக்கமுடைமை, அவா அறுத்தல், ஒழுக்கமுடைமை, வெகுளாமை, பொறையுடைமை, கூடா ஒழுக்கம், அன்புடைமையையும், அருளுடைமையையும், மெய்யுணர்தல் என்ற வரிசையில் பயணிக்கிறோம்.

வரும் பதிவுகளில் இந்த வரிசையில் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்!.


Friday, June 29, 2018

கவிக்கோ அப்துல்ரகுமான் புதுக்கவிதையுலகின்
புவிக்கோ
புவியுலகில் மெய்யுடலால்
நம்மை விட்டு ‘அகன்ற’
இந்நாளில், நினைவுகளெல்லாம்
அவருடன் மனமொத்துப் பழகிய
அழகிய நாட்கள் நெஞ்சில்
ஈரமாய் என்றென்றும், இன்றும்.. .!
நினைவுகளின் தொடரலைகள்
உங்களுடன் ... !

......................................................................
கவிக்கோ ஒரு இலக்கியப் புவிக்கோ!
கவிக்கோ நீ
கண்ணியக் கடலில்
விளைந்த பவளம் !
தொப்பியை கழற்றினால் மட்டும்
தலை கவிழ்கிறது உன் பேனா
வார்த்தைகளுக்கு !
வாடிய கவியுலகில்
தேடியபோது
தேடாமலே
ஓடிய வைகைக்கரைதொட்டு
பாடியே வந்துதித்த கவிக்கோ !
உன்னை வாசித்தால்
பொற்கோவை இதழ் மடியும்
பால்கோவாவின் சுவை வடிவம் !
தட்டிலே மட்டும் அழகாய்
பட்டினில் பொதிந்த கவிதையை
சுட்டிடும் அழகு தீபமாக்கி
விட்டிலாய் தமிழர்களை
சுட்டிட அழகு பார்த்தவர் !
சேற்றுக்கு மேல் நின்றாடும்
நாற்றுக்கு நளினமாய்
காற்றுக்கே கவிதை பாட
கற்றுத்தந்த காற்றாடி !
பண்டிதர் மட்டுமே படித்து
ஒண்டியாய் இழுத்த தமிழ்த்தேரை
புதுக்கவிதை வடம் பூட்டி
பாமரனுடன் உலாவரவைத்த கவிக்கோ !
நீயோ
தலைக்கனமற்ற புள்ளி
எளியவரும் வறியவரும்
எப்பொழுதும் தேடிவரும்
பெரும் புள்ளி !
நேர்மையும் தர்மமும்
நித்தமும் நீதொழும் பள்ளி !
என்போன்ற தமிழ்க்கவிதை
ஆர்வலருக்கு நீ ஒரு
தமிழ்ப்பள்ளி !
அறிவுசார் கவிஞர்க்கோ
கல்விச்சாலையின் தரமான
தனிப்பள்ளி !
இன்னும் தொட்டுப்பார்த்து
ரசிக்க நினைக்கும்
தமிழ்த்தோழி !
கவிதை எழுத என்
பேனா நினைக்கும்
போதெல்லாம்
வருகிறாய் நீ ஒரேஒரு
விடிவெள்ளி !
நீ கவிதை விஞ்ஞானி
இலக்கியப் பொறியாளர்
செந்தமிழ் ஓடத்தை
உந்த வைத்து ஓட்டிய
புதுக்கவிதைத் துடுப்பு !
கவிதைப் பட்டறையில்
கனன்ற ‘படிம’ உருக்கு !
வார்த்தை இருப்புக்களை
புதுப்பொலிவால்
புடம்போட்டு கூராக்கியவன் !
யாப்பையும் தளையையும்
‘காப்பு’க் கட்டிவத்து
புதுக்கவிதைத் திருவிழாவுக்கு
புதுமரத்தில்
கொடியேற்றியவன் !
கண(நேரத்)த்துக்குக்
கணக்கு பார்த்துக்
கவிதை வார்த்தைகள்
வர்த்தகமாகும்
வெள்ளித்திரைச் சந்தையில்
பணத்துக்கு
விலை போகாதது
உன்பேனா !
நீ கண்ட நல்ல தமிழ்க்கனவுகள்
நிஜமாய் பலிக்கட்டும்
நிறைவாய் தமிழ்த்தாயின்
தமிழமுது வற்றாது சுரக்கட்டும் !
உன் நினைவுகளால்
என்றென்றும் ...
மு. பஷீர்

Saturday, August 19, 2017

‘கோடங்கி’ & ‘நட்சத்திரச் சிதறல்கள்’ கவிதை நூற்கள் அறிமுகம்- மஸ்கட்

வணக்கம் !
என்னுடைய ‘கோடங்கி’ மற்றும் ‘நட்சத்திரச் சிதறல்கள்’ என்ற இரு கவிதை நூற்கள் அறிமுகம் மஸ்கட் அஞ்சப்பர் உணவக அரங்கில் அகஸ்ட் 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை வெகுசிறப்பாக நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஸுபைர் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் திரு.பத்ரிநாத் மற்றும் மஸ்கட் தமிழ்ச் சங்க முன்னாள் துணைத்தலைவர் திரு. சந்திரமோகன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். திரு.பத்ரிநாத் அவர்கள் நூற்களின் பிரதிகளை வெளியிட்டு மதிப்புரை உரையாற்றினார். திரு. சந்திரமோகன் அவர்கள் நூற்களைப் பெற்று சிறப்புரை நிகழ்த்தினார்.
திரு. ராஜாராம், திரு.வெங்கடரமணி, திரு.சிவராஜ்குமார், திருமதி. சுவர்ணா, திருமதி.கோகிலவாணி,
திரு,வாசுதேவன் சார்பாக திருமதி.ஜெயஸ்ரீ, திருமதி.சாவித்ரி, திரு. தேவதாஸ் ஆகியோர்
மதிப்புரையாற்றினர்.
நான் ( நூல் ஆசிரியர் மஸ்கட் மு. பஷீர் ) ஏற்புரை ஆற்றினேன்.
முன்னதாக திரு.சுந்தராஜன் வரவேற்புரை நிகழ்த்த, திரு.சபரிக்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மஸ்கட் தமிழ்ப் படைப்பாளிகளும், ஆர்வலர்களும் கலந்து நிகழ்வைச் செம்மையுற சிறப்பித்தனர்.


Monday, August 14, 2017

‘கோடங்கி’ மற்றும் ‘நட்சத்திரச் சிதறல்கள்’ என்ற என்னுடைய இரு கவிதை நூற்கள் வெளியீட்டு விழா

அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!
‘கோடங்கி’ மற்றும்  ‘நட்சத்திரச் சிதறல்கள்’ என்ற என்னுடைய இரு கவிதை நூற்கள் வெளியீட்டு விழா சென்ற 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு குமரிமாவட்டம், திருவிதாங்கொடு முஸ்லிம் கலைக்கல்லூரி கலையரங்கில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

அரபித்துறைத் தலைவரின் மறைவாழ்த்தோடு தொடங்கிய விழாவில் பேராசிரியர். அஸ்கர் வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசிரியர். ஹாமீம் முஸ்தபா கவிதைகளினூடே பயணித்து விழாவினைத் தொகுத்து வழங்கினார்,
HKRR கல்லூரி, உத்தம பாளையம். பேராசிரியர். முனைவர் மு. அப்துல் சமது தலைமையேற்று விழாத் தலைமையுரையாற்றினார்,
திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் திருமிகு. பாரதி கிருஷ்ணகுமார்
விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ‘கோடங்கி’ கவிதை நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்கால சமூகத்தின் அவலங்களையும், மானுடத்தின் இன்றைய சூழலையும் பிரதிபலிக்கும் விதமாக எளிமையாகவும், அற்புதமாகவும் கவிதைகள் அமைந்திருப்பதாக அழுத்தமான, நெகிழ்ச்சியான, அற்புதமான உரையாற்றினார்.
‘நட்சத்திரச் சிதறல்கள்’ கவிதை நூலை நெல்லை வானொலி நிலைய இயக்குனர் முனைவர்.சுந்தர ஆவுடையப்பன் வெளியிட்டு கருத்தாழமிக்க, சுவையான உரையை நிக்ழ்த்தினார்.
‘கோடங்கி’ கவிதைநூலை பத்திரிகையாளர், எழுத்தாளர், திரு, சோழ நாகராஜன் பெற்றுக்கொண்டு சில கவிதைகளை மேற்கோள்காட்டி அருமையான வாழ்த்துரை வழங்கினார்.
தெற்கெல்லை தியாகியும், பத்திரிகையாளருமான திருமிகு. கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்கள் ‘நட்சத்திரச் சிதறல்கள்’ நூலைப் பெற்றுக்கொண்டு யதார்த்த வாழ்வின் நிலைகளை தன்போன்ற வயதொத்தவர்களும் எளிதில் புரியும் வண்ணம் அமைந்திருப்பதாக கவிதைகளை மேற்கோள்காட்டி வாழ்த்துரை வழங்கினார்,
அரசியலின் அப்பழுக்கற்ற மனிதராக இன்றளவும் வாழ்ந்து சிறப்பிக்கும் முன்னாள் எம்.எல்.ஏ திரு, முகமது இஸ்மாயில் அவர்கள் இரு நூற்களையும் திரு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் வெளியிடப் பெற்றுக்கொண்டார்,

என்னுடைய நன்றியுடன் கூடிய ஏற்புரையில் கோடங்கி கவிதைகள் உருவானது பற்றியும், அதன் காட்சியியல் கருவுருவானவிதம் பற்றியும், சமூக அக்கறையுடன் கூடிய கவிதைகளின் தோற்றம் பற்றியும் எடுத்துரைத்து, தன் இலக்கியப் பயணத்தில் துணை நின்றவர்களையும், விழாவில் வந்து சிறப்பித்த இலக்கிய ஆர்வலர்கள், தமிழ்ப் பெரியவர்கள், மாணவ மாணவியர் அனைவருக்கும் நன்றி கூறினேன், கவிக்கோ அவர்கள் இருந்து நடத்தியிருக்கவேண்டிய விழா எனக்கூறி கவிதை நூலை கவிக்கோவுக்கு சமர்ப்பித்து நெகிழ்ந்தேன்.
விழாவுக்கான சிறப்பான ஏற்பாடுகளை முஸ்லிம் கலைக் கல்லூரித் தாளாளர், லயன். Dr. H. முகமது அலி அவர்களின் வழிகாட்டலின்பேரில் கல்லுரியின் முதல்வரும், பேராசிரியர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர், அரங்கம் நிறைந்த விழாவாகவும், நெஞ்சம் நிறைந்த விழாவாகவும் விழா செவ்வனே நடந்தேறியது.

Wednesday, December 23, 2015

நபிகளார் பிறந்த நாள் !

நபிகளார் பிறந்த நாள் !

பாலை மானுடமலரைப்
பிரசவித்தது;
அரேபிய மணத்துடன் !

படிப்பறியாத நபிகளிடம்தான்
மானிடப் பல்கலைக்கழகங்கள்
பாடம் கற்றன !

ஏழையாகவே வாழ்ந்த
பண்பாளரிடம்தான்
அரசாட்சியே அடைக்கலம் கண்டது !

அவரின் புண்ணிய
போதனைகளால் பூவுலகே
புதுசுவாசம் கண்டது !

சமத்துவ நிழலில்
சகோதரத்துவ வெயில்
சாந்தமாய் இளைப்பாறியது !

பெண்சிசுக் கொலையும்
பெண்ணிய அடிமையும் அவரின்
கடைக்கண் பார்வையால்
கனலாய் எரிந்தன !

நபிகளார் பிறப்பு
நாணயத்தின் மறுபதிப்பு -அது
நானிலத்தின் சிறப்பு !


…..மஸ்கட் மு.பஷீர்

Friday, October 30, 2015

கவிக்கோ பவளவிழா

கவிக்கோ அப்துல்ரகுமான் என்ற மாபெரும் கவிஞரின் பவளவிழா சென்னையில் சென்ற 26 & 27 ஆம் தேதிகளில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக மிகச்சீரும் சிறப்புமாக நடந்தேறியது.
அரசியல், இலக்கியம், சினிமா, கலை, இசை, சமயம், இயல், பத்திரிக்கை & ஊடகம் என அனைத்து துறைகளையும் சார்ந்த தலைவர்கள், பிரபலங்கள், படைப்பாளிகள், கலைஞர்கள். அறிஞர்கள், சமயத் தலைவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசை இயக்குனர்கள், திரைத்துறை படைபாளிகள் மற்றும் கலைஞர், துணைவேந்தர்கள், நீதியரசர்கள், பேராசிரியர்கள், பத்திரிக்கையாசிரியர்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள், பிரபலங்கள் (இலங்கை முதல் அமெரிக்கவரை , மஸ்கட்டிலிருந்து நான்) என அனைவரும் ஓரு குடையின்கீழ் வந்து பங்கேற்று சிறப்பித்த நிகழ்வு என அனைவரும் பாராட்டும் நிகழ்ச்சியாக அமைந்தது.
மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் அனைத்து மதங்களின் பிரபலங்கள் ஆகியோரை ஒரேமடையில் அடுத்தடுத்து அமரவைக்க முடியும் என்கிற கற்பனைகெட்டாத சாதனையை நமது ‘தமிழ்’ அதாவது கவிக்கோ எனும் ‘கவிதைத் தமிழ்’ சாதித்திருக்கிறது.
கலைஞர், வீரமணி, வைகோ, தமிழிசை, காதர்முகைதீன், திருமாவளவன், பீட்டர் அல்போன்ஸ், நல்லகண்ணு, பழகருப்பையா, டி.கே.ரங்கராஜன் மற்றும் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரபலங்களும் வந்து கலந்து சிறப்பித்த காட்சி உண்மையில் ஒரு அதிசயமும், அற்புதம் தான்.
அதேபோல் சுகி.சிவம், பாலமுருகனடிமை சுவாமிகள், கஸ்பர், தேங்கை ஷர்புதீன் என மும்மதத்தைச் சார்ந்த மதப்பெரியவர்களும் மேடைய அலங்கரித்து கவிக்கோவுக்கு வாழ்த்து தெரிவித்ததும் மற்றொரு அருமையான பதிவு,



கவிக்கோ கருவூலம் நூலை கலைஞர் வெளியிட்டு வாழ்த்திப்பேசி கவிக்கோவின் பெருமைகளையும், எளிய பண்பினையும், அவருடன் கலைக்னரின் நட்பினையும் பாராட்டினார், கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிக்கோவின் கவி ஆளுமை மற்றும் திறன் பற்றிய உள்ளார்ந்த பேச்சு அனைவரையும் கவர்ந்தது.
உலகம் பாராட்டும் அமர்வில் நான் கவிக்கோவின் சிறப்புகள் பற்றிப் பேசி ஒரு கவிதையும் வாசித்தேன். என்னுடன், சிங்கப்பூர், மலேசியா, பங்காக், அமெரிக்கா, இலங்கை, துபாய், சவூதி அரேபியா எனப் பன்னாட்டு தலைவர்களும் பேசினர். முன்னதாக மலேசியா மற்றும் இலங்கை அமைச்சர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
ஒரு தமிழ்க்கவியால் அனைத்து தமிழர்களையும் வேற்றுமைகளை மறந்து ஒன்றிணைக்க முடியும் என்கிற மாபெரும் சக்தி தமிழுக்கு மட்டுமே இருக்கிறது என்பதை நிரூபிக்கும் ஒரு நிகழ்வாகும் எனச் சொல்வேன்.
என்னைப் பொறுத்த வரையில் இந்நிகழ்வு எனக்கு கிடைத்த ஒரு ‘விருது’ ஆகும்’. வாழ்க தமிழ் ! வளர்க தமிழினம் !
இன்னும் பதிவு செய்கிறேன் நிகழ்ச்சி பற்றி!
அன்புடன்
பஷீர்

Monday, September 28, 2015

தியாகத் திருநாள் !

தியாகத் திருநாள் ! 



விடிந்த இத்திருநாள் - தியாகத்தின்
வைகறைப் பிரவாகத்தின் பெருநாள் !

வல்லவன் சமிக்ஞையால்
சொல்லொணா அன்பின் மகவை
கல்போன்ற இறைநேச வலிமையால்
பலியிடச் சென்றநாளின் நினைவு !

இறைவனின் மேல்
கரையற்ற அன்பு
திரையற்ற சமுத்திரமாய்
வரையற்ற சோகம் தாய்க்கு !

அன்னை ஹாஜிராவின் துக்கம்
அருமைமகன் இஸ்மாயிலின் பக்கம்
அறுத்திடக் கத்தியும் மினுக்கம்
அருமைநபிகளின் இறையன்பின் செருக்கம் !

அன்பே உருவான இறைவன்
ஆணையிட்டான் ஆட்டின் பலியை
அன்பிற்கு ஏது அடைக்கும் தாழ்
அறிந்து அவனிடம் பணிந்திடும் நாள் !

இறைநேசர் தியாக வலிமையின் முன்
இறையின் நேசத்தில் விரிந்த பெருநாள்!
அன்பின் ஆழத்தை அகிலம் உணர்ந்திட
பண்பால் போற்றிடும் தியாகத் திருநாள் !

Friday, May 1, 2015


உழைப்பாளர் தினம் !

மேன்மைமிக்க
‘மே’ தின வாழ்த்துக்கள் !

உழைப்பின் வியர்வை
உலகத்தின் உயர்வை
உன்னிடம் தேடும்
உன்னதம் ‘மே’ தினம் !

உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனம்
உண்மை உழைப்பின்
நந்தவனம் !

சேற்றை மிதிக்கும்
உழவன் கால்கள்
சோற்றில் கைவைக்க்
உதவும் வடிகால்கள் !

சேறு மிதிபடா விட்டால்
சோறு கைதொடாது  !


உழைப்பால்
வெளியாகிறது வியர்வை !
ஒளியாகிறது உலகம் !
  
மேன்மைமிக்க
‘மே’ தின வாழ்த்துக்கள் !

அன்பன்

மு. பஷீர்

Wednesday, December 17, 2014

'பாலைப் பூக்கள்' கவிதை நூல் - இரண்டு வருடங்கள்

'பாலைப் பூக்கள்' கவிதை நூல் வெளியிட்டு  இரண்டு வருடங்கள் ஆகின்றன. 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இதன் வெளியீட்டு விழா நாகர்கோவிலில் சிறப்பாக நடந்தேறிய னிகழ்வு இன்றும் நினைவுகளாய் பதிந்து ஈரமாய் இனிக்கிறது.
கவிக்கோ அப்துல்ரகுமான் தலைமையில், முனைவர்.வெ.இறையன்பு அவர்கள் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு ஆற்றிய மதிப்புரை இன்றும் மணம் வீசுகிறது. முனைவர்.சுந்தர ஆவுடையப்பன், முனைவர்.அப்துசமது, கேப்டன் அமீரலி, பதிப்பாளர் ஷாஜஹான், ஹாமீம் முஸ்தபா, ஆர்னிகா நாசர், கவிஞர்கள், பேராசிரியர்கள், தமிழ் அறிஞர்கள் என அவை நிறைய தமிழ் நிறைந்து மலர்ந்திருந்த காட்சிகள் மனதுக்குள் இன்றளவும் மிளிரும் மத்தாப்பு !

அடுத்த ஆண்டில் அடுத்த படைப்பை வெளிக்கொணர வேண்டும் எனும் அவாவை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இறைவன் நாடட்டும் !
அன்பன். மஸ்கட் மு. பஷீர்
http://www.youtube.com/watch?v=mFV0tSjlCZU

Saturday, August 2, 2014

‘அகம் நிறைந்த அமீரகப் பயணம்’ - பாலைப் பூக்களின் அறிமுகமும், பின்னூட்ட நிகழ்வுகளும்

‘அகம் நிறைந்த அமீரகப் பயணம்’ - பாலைப் பூக்களின் அறிமுகமும், பின்னூட்ட நிகழ்வுகளும்
‘ஈத் பெருநாள்’ விடுமுறையில் துபாய் சென்றிருந்தபோது, துபாய் வானலை வளர்தமிழ் மற்றும் தமிழ்த்தேர் குடும்ப உறுப்பினர்கள் ஒரு சங்கம நிகழ்ச்சியை ‘துபாய் சிவஸ்டார் பவனில்’ ஏற்பாடு செய்திருந்தனர்.


எனது ‘பாலைப் பூக்கள்’ புத்தகத்தினை அறிமுகம் செய்யும் நிகழ்வாக அமைந்திருந்த நிகழ்வில் வானலை வளர்தமிழ் - தமிழ்த் தேர் - அமைப்பின் தலைவர் திரு கோவிந்தராஜ் அவர்கள் கலந்துகொண்டு கவிஞர் பஷீர் அவர்களுக்கு வரவேற்பு தந்தார்.  அமைப்பின் ஆலோசகர் கவிஞர் காவிரிமைந்தன் தமிழ்த்தேர் பதிப்பாசிரியர் கவிஞர்.ஜியாவுதீன்ஊடகவியலாளர் முதுவை.ஹிதாயத்துல்லாகவிஞர்.தஞ்சாவூரன்
கவிஞர் ஆதிபழனிகவிஞர் ஜெயராமன் ஆனந்திகவிதாயினி நர்கீஸ் பானு கவிதாயினி ஜெயா பழனிசெல்வி ஆனிஷா ஆகியோருடன் முக்கிய விருந்தினராக ‘காப்பியக்கோ’ கவிஞர் ஜின்னா ஷரிபுத்தீன் ஆகியோரும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கவிஞர் ஜின்னா ஷர்புதீன் தமிழ்தேர் சார்பில் பொன்னாடை அணிவித்தார்.  நினைவுப் பரிசினை  தமிழ்த்தேர் தலைவர் கோவிந்தராஜ் வழங்கி வாழ்த்துரையாற்றினார்.

என்னுடைய பாலைப்பூக்கள்” நூலும் காப்பியக்கோ ஜின்னா ஷர்புதீன்  எழுதிய எல்லாளன் காவியம்’ நூலும் அறிமுகப் படுத்தப் பட்டன.    நூல்களைப்பற்றி நூலாசிரியர்கள் சிறப்புரையாற்றினர்.   
கவிஞர் ஜியாவுதீன் தனது நன்றியுரையாற்றினார்.



அன்று மாலை காப்பியக் கவிஞர் ஜின்னா ஷர்புதீன் அவர்கள் இல்லத்தில் தமிழ்ப்படைப்பாளிகள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் என் இளமைக்கால நண்பர் பத்திரிக்கை புகைப்பட நிபுணர் குளச்சல் இப்ராகிம் அவர்களும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


‘பாலைப் பூக்கள்’ நூல் பின்னூட்ட நிகழ்வு’ – அஜ்மான் அமீரகத்தில்...!
ஜூலை 31-ஆம் தேதி இரவு ‘அஜ்மான் சிவஸ்டார் அரங்கில்’ வைத்து  ‘பாலைப் பூக்கள்’ நூல் பின்னூட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரு.ஹசன் அஹமது அவர்கள் தலைமையில், செல்வி ஆனிஷா மற்றும் செல்வன்.பசிம் பஷீர் ஆகியோரின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

கவிஞர்.காவிரிமைந்தன், கவிஞர். திண்டுக்கல் ஜமால், கவிதாயினி நர்கீஸ்பானு ஆகியோர் ‘பாலைப் பூக்கள்’ நூலுக்கு பின்னூட்டம் வழங்கிப் பேசினர். நான் நிறைவாக  நூல்  ஏற்புரை வழங்கினேன்.

‘தமிழ்த்தேர்’ பதிப்பாசிரியர்.கவிஞர். ஜியாவுதீன் வரவேற்புரை வழங்க, ஊடகவியலாளர்  முதுவை. ஹிதாயத்துல்லா முன்னிலை வகித்தார். செல்வன்.பசிம் பஷீருக்கு நன்றியுரை வழங்க வாய்ப்பளித்து சிறப்பித்தனர்.


மனதுக்கும்  நெஞ்சுக்கு நிறைவான இலக்கிய சுற்றுலாவாக இந்தப்பயணம் அமைந்தது. தமிழ் உறவுதான் உறவுகளில் எல்லாம் சிறந்தது என்பதற்கு இந்தப்பயணம் ஒரு சான்று என்றால் அதுமிகையாகாது.

அன்பின் நினைவுகளுடன்,
மஸ்கட் மு.பஷீர் மற்றும்
குடும்பத்தினர்கள்.        




Sunday, July 27, 2014

‘ஈகைத் திருநாள்’ வாழ்த்துக்கள்! EID MUBARAK TO ALL

‘ஈகைத் திருநாள்’ வாழ்த்துக்கள்!

நுண்ணறிவுக் கெட்டாத
விண்ணறிவிலும் கிட்டாத

இறைவனின் திகட்டாத
திரைவெண் ணவனருளை

திங்களொரு தினங்களிதில்
பொங்குமிருள் இரவுகளில்

கண்ணீரில் கரைத்திறைந்து
மண்ணிலும் விண்ணிலுமாய்

மகிழ்வெய்தி வாழ்வதற்காய்
முகில்கிழித்து வான்மதியாய்

வந்துசென்றது ‘ரமலான்’
விரிந்தது ‘ஈது’ மலராய் !

அனைவருக்கும் இனிய

‘ஈகைத்திருநாள்’ வாழ்த்துக்கள் !

அன்பன்; மஸ்கட் மு. பஷீர்


Saturday, June 28, 2014

மதிப்பிற்குரிய திரு.கி.வீரமணி அவர்களுடன் சந்திப்பு

 அண்மையில் மஸ்கட் வந்திருந்த மதிப்பிற்குரிய திரு.கி.வீரமணி அவர்களை நண்பர்களுடன் இனிதே சேர்ந்து சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர், பத்திரிக்கையாளார், சமூக ஆர்வலர், தொண்டுப் பணியில் தொடர்ந்து சளைப்பின்றி பணியாற்றிவருபவர், தமிழ் சமுதாயத்தின் முக்கிய பிரமுகர், அரசியல் கட்சியின் தலைவர் எனப் பல்முகங்கொண்ட சிறப்புகளுக்கு சொந்தக்காரரான திரு.கி.வீரமணி அவர்களின் சந்திப்பு வெகுநிறைவானதாகவும் பெருமைமிக்கதாகவும் அமைந்தது என்றால் அது மிகையாகாது,

தெளிந்த சிந்தனை வடிவம், கல்விப்பணியில் கடந்து வந்த பாதை, சமுதாயப் பயணத்தில் அவரின் அனுபவம், சமுதாயத்தின் மீதும், தமிழர்கள் மற்றும் தமிழ் மொழிமேல் கொண்ட ஆழ்ந்த பற்று, சிந்தனை மற்றும் அக்கறை என அவர் பகிர்ந்துகொண்ட கருத்துக்களை அப்படியே அள்ளிப்பருகி அமுதுண்ட மகிழ்ச்சி மனத்திலும், இதயத்திலும் நீங்காத நினைவலைகளின் எழுச்சி!.
என்னுடைய ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூலைப் பெற்று இருதினங்களிலேயே அதனை மொத்தமும் ஆழ்ந்து படித்து, அதற்கொரு அழகுப் பின்னுட்டமும் தந்து, அதை ‘விடுதலை’ இதழிலேயே பதித்து வெளியிட்டு என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். எத்தனையோ பணிகளுக்கிடையிலும் ஒரு புதுக்கவிஞனை – அதவும் என்போன்ற ஒரு புதிய கவிஞனை கவிஞனைத் தன் தூரிகையால் விமரிசித்து, வாழ்த்தி, மனதாரப் பாராட்டும் அவரின் இதுபோன்ற பண்புதான் அவரை தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் இன்னும் அரசாட்சி செய்ய வைத்திருக்கிறது….வைத்துக் கொண்டிருக்கிறது என் எண்ணுகிறேன்!.
அவரின் தமிழ்ப்பணியும், தொண்டும், கல்விப் பணியும் தொடர வேண்டும், மேன்மேலும் பணிசிறக்கவும் வெற்றிபெறவும் வேண்டும்..அவர் மூலம் தமிழும் தமிழ்ச்சமுதாயமும் ஒளிரவேண்டும்!!
அன்பன்
மஸ்கட். மு. பஷீர்.


Ramadan Wishes : ரமலான் வாழ்த்துக்கள்

ரமலான் பிறை ரம்மியமாய்;
நன்மையின் ஒளி 
இனி வளர்பிறையாய் !

பாவங்கள் எரியட்டும்-இறை
நாமங்கள் துதிக்கட்டும் !
படைத்தவனருள் சொரியட்டும் 

அனைவருக்கும் இனிய
ரமலான் நோன்புகால வாழ்த்துக்கள் !
அன்பன்
மு. பஷீர், மஸ்கட்

  
May this Ramadan bring in you  the 
most brightest and choicest happiness and love 
you have ever wished for.
May lights triumph over darkness.

Wish you a very happy Ramadan Mubarak

Mu. Basheer, Muscat

Sunday, June 15, 2014

விடுதலை இதழில் 'பாலைப் பூக்கள்' கவிதை நூல் பற்றி ஆசிரியர் அய்யா. திரு. கி. வீரமணி அவர்களின் கருத்துப் பின்னூட்டம்.

விடுதலை இதழில் 'பாலைப் பூக்கள்' கவிதை நூல் பற்றி ஆசிரியர் அய்யா. திரு. கி. வீரமணி அவர்களின் கருத்துப் பின்னூட்டம்.

http://www.viduthalai.in/e-paper/82139.html 

ஓமான் நாட்டின் தலைநகர் மஸ்கட்டிற்குச் சென்று ஒரு நாள் - இடைவெளியில் - தங்கி, சென்னை திரும்பினோம் ஜெர்மனி நாட்டுப் பயணத்தில் (8.6.2014) ஓமான் கடலை நினைத்தால் இன்னமும் மறக்கவே முடியாத வேதனை எம் நெஞ்சத்தில்!

ஆனால் சிறிய அழகான, இயற்கை எழில் கொஞ்சும் நாடு, நெய்தல் (கடலும் கடல் சார்ந்த பகுதி), குறிஞ்சி (மலையும் மலை சார்ந்த பகுதி), பாலையும் மூன்றும் இணைந்த இயற்கைத்தாயின் முக்கூட்டு நாடு அது!

அதன் இயற்கை அழகைக் கண்டு வியந்தோம் அங்கு நமது குடும்ப நண்பர் அதிகாரியாக பணி புரியும் தி.வெங்கடேஷ் - அவரது வாழ்விணையர் சாமுண்டேசுவரி அவர்களும் எங்களை வரவேற்று தங்கள் இல்லத்தில் தங்க வைத்தனர். அன்பு உபசரிப்பால் திணற வைத்த அவர்கள், அங்குள்ள தமிழ் உறவுகளில் முக்கிய பொறுப்பாளராகவும், பல்வேறு துறை ஆற்றலாளராகவும், உள்ளவர் களையும் அவர்களது இல்லத்திற்கு அழைத்து ஒரு சிறு கலந்துரையாடல் நடத்தினார்கள்.

பல நூற்றுக்கணக்கான இளம் தமிழ்ப் பிள்ளைகளும் தமிழ்ச் சொல்லித்தரும் பள்ளிப்பணி முதல் தமிழ்ச் சங்கம் வரை மிக அருமையாக அந்தந்த தமிழர்கள் தொண்டறம் புரிகிறார்கள்.

நம் தமிழர்கள் பலரும் பல்வேறு தொழிலதிபர் களாகவும், அதி காரிகளாகவும், பொறியாளர்களாக வும், மேலாண்மை பொறுப்பாளர் களும் உள்ளனர் என்பது நமது காதில் தேன் பாய்ச்சுவதாக உள்ளது!

அங்கு தமிழ்ச்சங்கத்தை மிகவும் திறம்பட நடத்திவரும் ஜானகி ராமன் தமிழ் இலக்கிய கழகத்தை அமைத்து தவறாமல் சந்தித்து நடத்தி வரும் (குமரி மாவட்டம்) பஷீர் அவர்கள் தலைசிறந்த கவிஞர் இலக்கியப் படைப்பாளியாக உள்ளார் என்பது அவர் தந்த பாலைப்பூக்கள் கவிதைத் தொகுப்பின் மூலம் உலகிற்கே பறை சாற்றுகிறது!

தமிழ்நாட்டு வாழ் தமிழர்கள் என்பது தமிழ்த் தொண்டை விட மிகச்சிறப்பானது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

தமிழ் மண்ணை மறக்காதது மட்டுமல்ல, தமிழ்நாட்டிலிருந்து செல்லும் தமிழர்களை கட்சி, ஜாதி, மத பேதமின்றி வரவேற்று வாழ்த்திடவும் தவறாததே. இலக்கிய தமிழ்ப்பண்ணையையும் அங்கே உருவாக்கி, ஒற்றுமை உழைப்பு என்கிற உரமிட்டு உழவாரப் பணிகளையும் செய்திட முன்னணியில் உள்ளனர்.

பாலைவனத்தில் கூட தமிழ்ப்பூக்கள் - பாக்கள் - பூத்துக்குலுங்கும் - புதுமணம் பரப்பும் - புகழ்முடி சேர்க்கும் என்பதற்கு 'பாகவி' பஷீர் அவர்களின் பாலைப்பூக்களே சான்று பகருவதாக உள்ளன. படித்தேன், சுவைத்தேன், கீழே வைக்காமல் படித்து முடித்தேன், எல்லாம் தெவிட்டாத தேன் தான்.

இதோ ஒரு சில பூக்கள் அந்த பூங்கொத்தி லிருந்து - சிந்தனைகள் சிறகடித்துப் பறக்கின்றன.

கருப்பு நிறம் கொண்ட காகத்தைப்பற்றிய கவிதை வரிகள் சில

காகம் கரைகிறது; கேட்போமா? (பக்கம் 18-19) (ஒரு பகுதி)

...என் மேனியின்
வண்ணத்தால் ஒதுக்கப்படுகிறேன்
தப்பேதான்!
இங்கே!
வர்ணங்களால் பிரிப்பது
வாடிக்கைதானே!
அடுத்து வரம் தருவாய் என்ற தலைப்பில் (பக்கம் 38)

தேய்கின்ற நிலவுக்கு சேதாரம் அகற்று - தருவாய்
பௌர்ணமியில் புல்வெளியில்
பாயிரம் பாடக் காற்று!


வீதியினில் திரிகின்ற

மதயானைகள் மதிபெறட்டும்-அது
வெறி கொண்டால் இரும்புத்
தளை கொண்டு அடங்கட்டும்!


சாதியின் பிரிவினையை

சம்மட்டியால் உடை - அருள்
சோதியின் வடிவே மனிதன் என்போரை
உபசரிக்கட்டும் வாசல் நடை!

இதுபோன்ற கருத்தாழம் மிக்க கவிதை வரிகளில் நல்ல மனித நேயம் மலர்ந்த பாலைப்பூக்கள் என்ற கரு பசுஞ்சோலைப்பாக்கள்! படித்துப் பயன் பெறுங்கள்.

Read more: http://www.viduthalai.in/e-paper/82139.html#ixzz34d99r1en


டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி & டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் மஸ்கட் நிகழ்ச்சி

டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி  & டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் மஸ்கட் நிகழ்ச்சி
மஸ்கட்டில் டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி நவநீத கிருஷ்ணன் மற்றும் டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் தம்பதியரின் மண்வாசனையோடு கிராமிய சங்கமம் நாட்டுப்புற பாடல் & நடன நிகழ்ச்சி !

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2

B. H. அப்துல் ஹமீது & பஷீர் முகம்மது

B. H. அப்துல் ஹமீது & பஷீர் முகம்மது
B. H. அப்துல் ஹமீது (பாட்டுக்கு பாட்டு) @ Muscat & பஷீர் முகம்மது

தேவா, L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு

தேவா, L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு
‘தேனிசைத் தென்றல்’ தேவா மற்றும் ‘கலைமாமணி’ L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு. சங்கத்தின் கலாச்சார மற்றும் இலக்கியச் செயலாளர் திரு. பஷீர் முகமது அவர்கள் நிகழ்ச்சித் தொகுப்புரையாற்றினார்.

பாட்டுக்கு பாட்டு @ Muscat

பாட்டுக்கு பாட்டு @ Muscat
B. H. அப்துல் ஹமீது பாட்டுக்கு பாட்டு @ Muscat & பஷீர் முகம்மது